வார்டு உறுப்பினரின் கணவரை தாக்கிய 2 பேர் கைது

ஜக்கனாரை ஊராட்சி வார்டு உறுப்பினரின் கணவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு திரண்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-05 14:22 GMT
கோத்தகிரி

ஜக்கனாரை ஊராட்சி வார்டு உறுப்பினரின் கணவரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முன்பு திரண்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கணவர் மீது தாக்குதல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஓரசோலை அண்ணாநகரை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 48). கோத்தகிரி ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர். இவருடைய மனைவி தேவகி, ஜக்கனாரை ஊராட்சி 1-வது வார்டு உறுப்பினர் ஆவார்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி மாலையில் அண்ணாநகரில் உள்ள 150 குடியிருப்புகளுக்கு குடிநீர் குழாய் வசதி பெறுவது தொடர்பாக கிராம மக்களுடன், பெரியசாமி மற்றும் தேவகி ஆகியோர் ஆலோசனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த ஜெஸ்டின், மனோ தீபன் ஆகியோர் பெரியசாமியிடம் திடீரென வாக்குவாதம் செய்து அவரை தாக்கியதாக தெரிகிறது. மேலும் சுமார் 20 அடி ஆழ பள்ளத்தில் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. 

பரபரப்பு

இதில் காயம் அடைந்த பெரியசாமி, ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெஸ்டின், மனோ தீபன் ஆகியேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த நிலையில் பெரியசாமியை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கனவே நடைபாதையை ஆக்கிரமித்து சுவர் கட்டியவர்களை கண்டித்து கிராம மக்களுடன் போராட்டம் நடத்தியதால் அவர் மீது போடப்பட்டு இருந்த வழக்கை திரும்ப பெற வேண்டும்,

 அந்த நடைபாதை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு கோத்தகிரி போலீஸ் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன், பொருளாளர் மண்ணரசன் ஆகியோர் தலைமையில் உறவினர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

பேச்சுவார்த்தை

உடனே அவர்களுடன், இன்ஸ்பெக்டர் வேல்முருகன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டம் நடத்தாமல் கலைந்து சென்றனர். மேலும் நடைபாதை பிரச்சினை குறித்து கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும், அதில் தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர்.

மேலும் செய்திகள்