ஓட்டப்பிடாரம் அருகே மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு
ஓட்டப்பிடாரம் அருகே மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்து போனார்
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கச்சேரி தளவாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கணேசன் (வயது 48). இவர் தூத்துக்குடி மடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு பணியை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது புதூர்பாண்டியாபுரம் அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையில் குறுக்கே வந்த மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கணேசன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தில் இறந்த கணேசனுக்கு காளியம்மாள் என்ற மனைவியும், ஜெயஸ்ரீ என்ற மகளும், காசிமாணிக்கம் என்ற மகனும் உள்ளனர்.