அரசு பஸ்சை ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் கப்பலூர் சுங்கச்சாவடியில் அரசு பஸ்சை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை,
பாஸ்டேக்கில் பணம் இல்லாததால் கப்பலூர் சுங்கச்சாவடியில் அரசு பஸ்சை ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர்.இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கப்பலூர் சுங்கச்சாவடி
மதுரை சமயநல்லூரில் இருந்து விருதுநகர் செல்லும் 4 வழிச்சாலையில் கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி திருமங்கலம் நகராட்சி எல்லைக்குள் சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடிக்கடி இந்த சுங்கச்சாவடியில் முற்றுகை போராட்டம், வாக்குவாதம், தகராறு என தொடர்ந்து பிரச்சினைகள் நடந்து வருகிறது.
கடந்த வாரம், திருமங்கலம் நகர் வாகன ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பில், உள்ளூர் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல, ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக செல்லும் வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் வசூலிக்ககூடாது என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
அரசு பஸ் தடுத்து நிறுத்தம்
இந்த பிரச்சினை தொடரும் நிலையில், நேற்று காலை நெல்லையில் இருந்து அரசு பஸ் மதுரை மாட்டுத்தாவணி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் பயணம் செய்த பயணிகளில் பெரும்பாலானோர், மாட்டுத்தாவணி அருகில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக செல்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், பஸ் சுங்கச்சாவடிக்கு வந்தபோது, பாஸ்டேக்கில் பணம் செலுத்தப்படாததால, பஸ்சை அனுமதிக்க முடியாது என சுங்கச்சாவடி ஊழியர்கள் தடுத்து நிறுத்தினர். இது குறித்து, அரசு போக்குவரத்துக்கு கழக நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்த பின்னரே உரிய நடவடிக்கை எடுக்க முடியும். பாஸ்டேக்கில் கட்டணம் செலுத்திய விவரம் டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு தெரியாது. அலுவலகத்தில், பணம் செலுத்தி விட்டதாக கூறியதால், மீண்டும் சுங்கக்கட்டணம் செலுத்த முடியாது என தெரிவித்தனர்.
பயணிகள் போராட்டம்
ஆனால், சுங்கச்சாவடி ஊழியர்கள் கட்டணம் செலுத்தாமல் பஸ்சை அனுமதிக்க முடியாது என தெரிவித்துவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் சுங்கச்சாவடி முன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அந்த பஸ் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.