விபத்தில் சிக்கி காயமடைந்த போலீஸ்காரருக்கு உதவிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்
பாதுகாப்புக்கு வந்த ஜீப் விபத்தில் சிக்கியதால் காயமடைந்த போலீஸ்காரருக்கு சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் உதவி செய்தனர்.
சிக்கமகளூரு: பாதுகாப்புக்கு வந்த ஜீப் விபத்தில் சிக்கியதால் காயமடைந்த போலீஸ்காரருக்கு சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் உதவி செய்தனர்.
சிக்கமகளூருவில் பிரசாரம்
கர்நாடகத்தில் காலியாக உள்ள 25 மேல்சபை இடங்களுக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சிக்கமகளூரு மேல்சபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் காயத்திரியை ஆதரித்து நேற்று முன்தினம் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் சிக்கமகளூருவில் வாக்கு சேகரித்தனர். பின்னர் பிரசாரத்தை முடித்துவிட்டு சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் காரில் சிவமொக்கா நோக்கி சென்றனர்.
போலீஸ்காரர் காயம்
சித்தராமையா, டி.கே.சிவக்குமார் கார்களுக்கு முன்பாகவும், பின்பாகவும் பாதுகாப்புக்காக போலீசார் ஜீப்புகளில் சென்றனர். அப்போது சிவமொக்கா செல்லும் வழியில் லிங்கதஹள்ளி பகுதியில் சித்தராமையாவின் காருக்கு முன்பாக பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் ஜீப் ஒன்று, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள காபி தோட்டத்துக்குள் பாய்ந்து பல்டி அடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஜீப்பில் இருந்த ஒரு போலீஸ்காரர் பலத்த காயமடைந்தார். மற்றொருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயமடைந்த போலீஸ்காரருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
உதவிய சித்தராமையா, டி.கே.சிவக்குமார்
இந்த விபத்தை பார்த்ததும் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் உடனடியாக காரை நிறுத்த கூறினர். பின்னர் அவர்கள், விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று, காயமடைந்த போலீஸ்காரரை பார்த்தனர். பின்னர் அவர்கள் காயமடைந்த போலீஸ்காரரை மீட்டு மற்றொரு போலீஸ் வாகனத்தில் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்து உதவி செய்தனர்.
இதையடுத்து சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் சிவமொக்காவுக்கு புறப்பட்டு சென்றனர். காயமடைந்த போலீஸ்காரர் சிக்கமகளூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து லிங்கதஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த போலீஸ்காரருக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமாரும் உதவியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பெரிய தலைவர்களாக இருந்தாலும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவியதாக அவர்களை பாராட்டியும் வருகிறார்கள்.