சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம்: துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய தலைவர் பேட்டி

துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-04 21:12 GMT
சேலம்,
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான மறுவாழ்வு மற்றும் நலத்திட்ட பணிகள் குறித்த துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார். 
மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆணைய தலைவர் பேட்டி
இதைத்தொடர்ந்து தேசிய துப்புரவு மறுவாழ்வு ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம் சார்பில் சேலம் மாவட்டத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் ஒப்பந்த முறையில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் தெரிவித்தனர். குறிப்பாக 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர். 
இதையடுத்து மேட்டூர், எடப்பாடி, ஆத்தூர், நரசிங்கபுரம் ஆகிய 4 நகராட்சி ஆணையாளர்களை அழைத்து உடனடியாக நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்குமாறு கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இன்னும் ஒரு வாரத்திற்குள் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு பி.எப். பணம் பிடித்தாலும் அதை முறையாக செலுத்துவது இல்லை. இ.எஸ்.ஐ. கார்டு மற்றும் இன்சூரன்ஸ் கிடையாது. வாரத்தில் ஒருநாள் விடுமுறை வழங்க மறுப்பது போன்ற பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும் என்று கலெக்டருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நீதிபதி தலைமையில் குழு
தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் சுயமாக தொழில் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடனுதவிகள் வழங்குவதற்கு தேசிய அளவில் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உள்ளது. அதேபோல், தமிழகத்தில் மாநில அளவில் நிதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அல்லது ஆணையம் அமைக்க வேண்டும். ஏற்கனவே கர்நாடகா உள்பட 9 மாநிலங்களில் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அங்கு ரூ.100 முதல் ரூ.400 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, மாநில அளவில் ஆணையம் அமைத்தால் 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி தூய்மை பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யப்படும்.
தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை ஆராய எப்படி குழு அமைத்தார்களோ? அதேபோல் துப்புரவு பணியாளர்களின் சிரமங்களை போக்குவதற்கும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெயில் நிலையத்தில் ஆய்வு
முன்னதாக சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேசிய தூய்மை துப்புரவு மறுவாழ்வு ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் கலந்து கொண்டு ரெயில்வே ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அவர் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு சென்று அங்குள்ள துப்புரவு பணியாளர்களிடம் சம்பளம் குறித்தும், அவர்கள் பெறக்கூடிய சலுகைகள் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, ரெயில்வே கோட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்