வீடுகளில் மூலிகை மரங்களை வளருங்கள்
வீடுகளில் மூலிகை மரங்களை வளருங்கள் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகர்கோவில்:
வீடுகளில் மூலிகை மரங்களை வளருங்கள் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கலைஞர் மூலிகைக்காடு
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் கன்கார்டியா உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மூலிகை காட்டில் 43 அரியவகை மூலிகை மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின் முன்னிலை விகித்தார். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு 43 அரியவகை மூலிகை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
பின்னர், அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மரம், செடி, கொடிகள், நீர் நிலைகள் நிறைந்த மாவட்டமாக கன்னியாகுமரி இருந்து வருகிறது. இங்கு பல அரியவகையான மரங்கள் வனப்பகுதிகள் மற்றும் வீடுகளிலும் நிறைந்து காணப்பட்ட நிலையில், தற்போது நமது மாவட்டத்தில் இயற்கை வளங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு, இயற்கை சீற்றங்கள் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
43 அரியவகை மரங்கள்
குமரியில் பாரம்பரிய இயற்கை வளங்கள் மற்றும் அரியவகை மூலிகைகளை பாதுகாக்கும் வகையில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் முழு பங்களிப்புடன் கலைஞர் மூலிகை காடு அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்து.
இந்த கலைஞர் மூலிகைக்காடு என்ற தோட்டத்தில் ருத்ராட்ச மரம், காயமரம், கற்பூர மரம், தம்பக மரம், குங்கும மரம் மற்றும் ஜாதிக்காய், அத்தி, அசோகா, ஈட்டி, வேங்கை, செஞ்சந்தனம், காபி, குமிழ் , ராஜபுளி, எட்டி, வில்வ, கிராம்பு, நெல்லி, முள் சீத்தா, ஆடாதொடை, குடம்புளி, பிஸ்தா, வஞ்சி, கடம்பம், பன்னீர், ராமர் சீதா, வன்னி, முள்ளு முருங்கை, கருநொச்சி, அரப்பு, மகிழம், சந்தனம், கருமருது, வெண்நுணா, சர்வ சுகந்தி, சிசே, செம்ப்புலா, மந்திர, அன்னைக்கொய்யா உள்பட மொத்தம் 43 அரியவகை மூலிகை மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளது.
தூய்மையான காற்று
பொதுமக்களாகிய நாம் அனைவரும் நமது இல்லங்களில் இருக்கும் சிறிய இடங்களில் ஏதாவது ஒரு வகையான நாட்டு மரங்கள் அல்லது மூலிகை மரங்களை வளர்ப்பது மிகவும் இன்றியமையதாகும். பொதுமக்கள் மரங்கள் நடுவதில் அதிகம் ஆர்வம் கொள்ள வேண்டும். மரங்கள் வளர்பதன் மூலம் நமக்கும், நமது சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் தூய்மையான காற்று கிடைப்பதோடு, சுகாதாரமான சூழ்நிலையில் வாழும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நிகழ்ச்சியில், மாநில துணை செயலாளர் (சுற்றுச்சூழல் அணி) சபி M.சுலைமான், வக்கீல் மகேஷ், தி.மு.க. மீனவரணி முன்னாள் மாவட்ட அமைப்பாளர் பசலியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.