பால் கறக்க விடாத மாடுகள் மீது போலீசில் புகார் அளித்த விவசாயி
பால் கறக்க விடாமல் எட்டி உதைக்கும் மாடுகள் மீது விவசாயி போலீசில் புகார் அளித்த ருசிகர சம்பவம் சிவமொக்காவில் நடந்துள்ளது.
பெங்களூரு: பால் கறக்க விடாமல் எட்டி உதைக்கும் மாடுகள் மீது விவசாயி போலீசில் புகார் அளித்த ருசிகர சம்பவம் சிவமொக்காவில் நடந்துள்ளது.
ருசிகர சம்பவம்
பொதுவாக போலீஸ் நிலையங்களில் நகை, பணம் திருட்டுபோனாலோ அல்லது சொத்து பிரச்சினை, குடும்ப பிரச்சினை தொடர்பாகவோ புகார் கொடுக்க செல்வது வழக்கம். ஆனால் கர்நாடகதத்தில் விவசாயி ஒருவர் தனது பசுக்கள் பால் கறக்க மறுப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:-
விவசாயியும்... 4 பசுமாடுகளும்...
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா ஒலேஒன்னூர் அருகே சிட்லிபுரா என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ராமய்யா. இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் 4 பசு மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
இவர் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் 4 மாடுகளிலும் பால் கறந்து விற்பனை செய்து வந்துள்ளார்.
பால் கறக்க விடாமல் எட்டி உதைப்பு
ஆனால் தற்போது அவரது பசு மாடுகள் ராமய்யா பால் கறக்க முயன்றால், பால் சுரக்கவில்லையாம். அதையும் மீறி அவர் பால் கறக்க முயன்றால், மாடுகள் அவரை காலால் எட்டி உதைத்துவிடுகின்றனவாம்.
இதையடுத்து சொன்னப்படி கேளு... மக்கர் பண்ணாதே... என தனது மாடுகளை அவர் ஆசுவாசப்படுத்தியும் பார்த்துள்ளார். ஒரு நாள், இரண்டு நாள் அல்ல கடந்த 5 நாட்களாக இதே கூத்து நடந்துள்ளது.
அதே வேளையில் ராமய்யாவின் மனைவி ரத்னம்மா பால் கறந்தால் மாடுகள் எதுவும் செய்யவில்லையாம். அவர் மாடுகளில் இருந்து எளிதாக பால் கறந்துவிடுகிறாராம்.
பொறுமையை இழந்த விவசாயி
‘வளர்த்த கிடா தன் மார்பிலே பாய்வது போல்’ தான் வளர்த்து வரும் மாடுகள் கடந்த 5 நாட்களாக பால் கறக்கவிடாமல் தன்னை காலால் எட்டி உதைத்து வருவதால் ராமய்யா மிகுந்த வேதனை அடைந்தார்.
தொடர்ந்து மாடுகள் தான் பால் கறக்க முயன்றால் எட்டி உதைத்து வருவதால் பொறுமையை இழந்த ராமய்யா, மாடுகள் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார். அதன்படி அவர் தனது 4 மாடுகளையும் அழைத்துக் கொண்டு ஒலேஒன்னூர் போலீஸ் நிலையத்திற்கு பொடி நடையாக சென்றார்.
போலீசில் புகார்
அவரை பார்த்த போலீசார், ராமய்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தான் வளர்த்து வரும் பசு மாடுகள் 5 நாட்களாக பால் சுறக்க விடுவதில்லை என்றும், தன்னை காலால் எட்டி உதைத்து வருவதாகவும், எனவே மாடுகளுக்கு புத்திமதி கூறி தான் பால் கறக்கும் போது மாடுகள் பால் சுரக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதை கேட்டு முதலில் போலீசார் சிறிது நேரம் ஆடிதான் போய்விட்டனர்.
பின்னர் ராமய்யாவிடம் போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் ருசிகர விவாதமாக மாறியுள்ளது.