தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் காத்துக்கிடக்கும் பொதுமக்கள்
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் மாலை நேரங்களில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுவதால்பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் மாலை நேரங்களில் குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுவதால்பொதுமக்கள் காத்துக்கிடக்கின்றனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புதிய பஸ் நிலையம்
தஞ்சை புதிய பஸ் நிலையம் 1995-ம் ஆண்டு தஞ்சையில் 8-வது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற போது கட்டப்பட்டது. இங்கிருந்து மதுரை, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், கோயம்புத்தூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த பஸ் நிலையத்திற்கு மையப்பகுதியில் உள்ள வாயில் வழியாக நகரத்துக்குள் இயக்கப்படும் பஸ்கள் சென்று வருகின்றன.
இந்த பகுதியில் இருந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்திற்கும், மருத்துவக்கல்லூரிக்கும் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் மட்டும் இங்கிருந்து நகரபஸ்கள் இயக்கப்படுவது இல்லை. மற்ற நேரங்களில் நகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
காத்துக்கிடக்கும் அவலம்
ஆனால் மாலை நேரத்தில் நகர பஸ்களுக்காக பொதுமக்கள் அதிக அளவில் காத்துக்கிடக்கின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர், கூலி வேலைக்கு செல்வோர், வெளியூர்களுக்கு சென்று விட்டு வருபவர்கள் என ஏராளமானோர் காத்துக்கிடக்கின்றனர்.
வழக்கமாக மாலை நேரங்களில் பொதுமக்கள் இவ்வாறு கூட்டமாக நிற்பதை காண முடிகிறது. அரைமணி நேரத்திற்கு ஒருமுறை பஸ் வந்து நின்றவுடனேயே பொதுமக்கள் ஓடிச்சென்று ஏறும் நிலை உள்ளது. ஆனால் கர்ப்பிணி, வயதானர்களால் ஓடிச்சென்று ஏற முடியவில்லை. சிலர் ஓடிச்சென்று ஏறும் போது தவறி கீழே விழும் நிலையும் காணப்படுகிறது. அவ்வாறு விழுவதால் சிறு, சிறு விபத்துக்களும் ஏற்பட நேரிடுகிறது.
பொதுமக்கள் அவதி
இதனால் அவர்கள் அடுத்த பஸ் வரும் வரை கார்த்திருக்க வேண்டி உள்ளது. அவ்வாறு வந்தாலும் நிற்கும் கூட்டத்திற்கு ஏற்ப பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. தினமும் இதே நிலை தான் நீடிப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து மாலை நேரங்களில் பொதுமக்கள் டவுன்பஸ்களுக்காக காத்துக்கிடக்க வேண்டிய நிலை உள்ளது. மாலை நேரங்களில் குறைந்த பஸ்கள் இயக்கப்படுவதால் என்ன செய்வது என்று தெரியாமல் பயணிகள் திகைத்த வண்ணம் உள்ளனர்.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
எனவே பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் ரெயிலடி, பழைய பஸ் நிலையம், தற்காலிக பஸ் நிலையத்துக்கு மாலை நேரங்களில் குறிப்பாக மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை கூடுதலாக பஸ்களை இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றனர்.