செம்மரம் வெட்ட சென்ற 2 பேர் சாவு புரோக்கரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற சித்தேரியை சேர்ந்த 2 பேர் இறந்தது தொடர்பாக புரோக்கரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரூர்:
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்ற சித்தேரியை சேர்ந்த 2 பேர் இறந்தது தொடர்பாக புரோக்கரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 பேர் சாவு
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சித்தேரிமலை ஊராட்சிக்குட்பட்ட மிதிகாட்டை சேர்ந்தவர் ராமன் (வயது 42) என்பவர் கடந்த 27-ந்தேதி சித்தேரி பஸ் நிறுத்தம் அருகில் தலையில் காயத்துடன் இறந்து கிடந்தார். அதே ஊரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (44) என்பவர் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் தலை வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அரூர் போலீசார் விசாரணை நடத்தியபோது சித்தேரி பகுதியை சேர்ந்த பலர் ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதும், அதில் ராமன், பாலகிருஷ்ணன் உயிரிழந்ததும், மோகன் காயமடைந்து வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் தெரியவந்தது. தொடர்ந்து ராமனின் உடலை அரூரை சேர்ந்த கார் உரிமையாளர் சண்முகம், டிரைவர் பார்த்திபன் ஆகியோர் சித்தேரிக்கு கொண்டு வந்து போட்டதும் தெரிந்தது.
புரோக்கரிடம் விசாரணை
இதையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சித்தேரியை சேர்ந்த புரோக்கர் ரகு என்பவர் ராமனின் உடலை ஏற்றி வர சண்முகத்திடம் கூறியதும், அதன்படி அவரும், டிரைவரும் ராமனின் உடலை காரில் கொண்டு வந்து சித்தேரியில் போட்டு சென்றதும் தெரிந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் புரோக்கர் ரகுவை தேடி வந்தனர். அப்போது அவர் ஊட்டியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை தனிப்படை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.