சதுரகிரி செல்ல தடையால் தாணிப்பாறை மலையடிவாரத்தில் குவிந்த பக்தர்கள்

மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி தாணிப்பாறை மலையடிவாரம் முன்பு குவிந்த பக்தர்கள் அங்கு பூஜை செய்து வழிபட்டனர்.

Update: 2021-12-04 18:47 GMT
வத்திராயிருப்பு
மழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி தாணிப்பாறை மலையடிவாரம் முன்பு குவிந்த பக்தர்கள் அங்கு பூஜை செய்து வழிபட்டனர்.
பக்தர்களுக்கு தடை
தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப் பாதைகளில் அதிகமான தண்ணீர் செல்வதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் தடைவிதிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தாணிப்பாறை மலையடிவாரம் முன்புள்ள வனத்துறை கேட் பகுதிக்கு வந்தனர். அவர்களிடம் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என வனத்துறையினர் மற்றும் போலீசார் கூறினர். இதையடுத்து பக்தர்கள்  கேட் முன்பு மொட்டை அடித்தும், தேங்காய் பழம் உடைத்து, பத்தி, சூடம் ஏற்றி வழிபட்டனர். 
சிறப்பு அபிஷேகம்
மேலும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் இன்றி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பின்னர் மாலை 4 மணி முதல் 6 மணி வரை கார்த்திகை மாத அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது. கார்த்திகை மாத சிறப்பு பூஜைக்கானஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். 
பக்தர்கள் வருகையை அடுத்து தாணிப்பாறை மலையடிவாரப்பகுதியில் வனத்துறை கேட் முன்பு போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்