கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தரையில் அமர்ந்து போராட்டம்

கோவில் இடத்தில் தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை அகற்றக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-04 18:18 GMT
ஆரணி

கோவில் இடத்தில் தனிநபர் ஆக்கிரமித்துள்ளதை அகற்றக்கோரி இந்து முன்னணி அமைப்பினர் ஆரணி நகராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆக்கிரமிப்பு

ஆரணி டவுன் காந்தி ரோட்டில் ஆரணிபாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

 கோவில் அருகில் கோவில் இடத்தை தனிநபர் ஒருவர்  ஆக்கிரமிப்பு செய்து அசைவ உணவுகளை விற்பனை செய்து வந்துள்ளார். 

இதுகுறித்து பக்தர்கள் இந்து முன்னணி நிர்வாகிகளிடம்  கடையை அகற்ற வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் தாமோதரன், நகர தலைவர் நாகராஜன், நகர இளைஞரணி செயலாளர் விக்னேஷ் உள்பட நிர்வாகிகள் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திலும், ஆரணி தாசில்தார், ஆரணி நகராட்சி ஆணையாளர் ஆகியோருக்கு பலமுறை புகார் அளித்தனர்.

 மேலும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா அந்த ஆக்கிரமிப்பு இடத்தை உடனடியாக அகற்ற நகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பினர் இன்று காலை ஆரணி நகராட்சி அலுவலகத்தில் ஆணையாளரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த சென்றனர். அப்போது ஆணையாளர் இல்லாததால் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  

அங்கு இருந்த கணக்காளர் கவிதா போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஆணையாளர் 4 மணிக்கு வந்து, உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

பின்னர்  மாலை 4 மணி அளவில் நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வியிடம் இந்து முன்னணியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 

7-ந் தேதி அகற்றம்

அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதை நகராட்சி எல்லையாக இருந்தாலும் வருவாய்த் துறையினர் தான் ஆக்கிரமிப்பை அகற்ற செய்யவேண்டும், தாசில்தார் பெருமாள், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா ஆகியோரிடம் பேசியதில் வருகிற 7-ந் தேதி   அனைத்துத்துறையும் சேர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றி தருவதாக உறுதி அளித்தனர் என்று கூறினார். 

இதுகுறித்து இந்து முன்னணியினர் கூறுகையில் 7-ந் தேதி  ஆக்கிரமிப்பை அகற்றவில்லை என்றால் 8-ந் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்