பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி பா.ஜ.க. ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு சாலைகள் தடுப்புகளால் அடைப்பு; பொதுமக்கள் அவதி
பா.ஜ.க. ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தி.மு.க. அரசை வலியுறுத்தி புதுக்கோட்டையில் பா.ஜ.க.வின் விவசாய அணி, தொழில்பிரிவு, பட்டியல் அணி, வர்த்தக அணி சார்பில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி போராட்டம் நடத்த மாவட்ட தலைவர் ராமசேதுபதி தலைமையில் நிர்வாகிகள் புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே நேற்று காலை திரண்டனர். இதற்கிடையில் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அண்ணாசிலை பகுதியை சுற்றி இரும்பு தடுப்புகளால் சாலைகள் நான்கு புறமும் அடைக்கப்பட்டன. அந்த வழியாக போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. பா.ஜ.க.வினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க புறப்பட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் சிறிது வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 4 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு கொடுக்க போலீசார் அறிவுறுத்தினர். அதன்பின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் சாலைகள் தடுப்புகளால் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். அந்த வழியாக இரு சக்கர வாகனங்கள், கார்களில் செல்ல முடியாமல் தவித்தனர். பஸ் போக்குவரத்தும் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.