பாலங்களின் கீழ் தேங்கிய தண்ணீரில் மூழ்கிய கார்கள்20 பயணிகளுடன் சிக்கிய பஸ்

பாலங்களின் கீழ் தேங்கிய தண்ணீரில் மூழ்கிய கார்கள்20 பயணிகளுடன் சிக்கிய பஸ்

Update: 2021-12-04 17:29 GMT
பாலங்களின் கீழ் தேங்கிய தண்ணீரில் மூழ்கிய கார்கள்20 பயணிகளுடன் சிக்கிய பஸ்
கோவை

கோவையில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக பாலத்தின் கீழ் தேங்கிய தண்ணீரில் கார்கள் மூழ்கின. 20 பயணிகளுடன் தனியார் பஸ் சிக்கி நின்றது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 3 மணி முதல் கோவை, உக்கடம், ராமநாதபுரம், கோவில்பாளையம், காந்திபுரம், கவுண் டம்பாளையம், துடியலூர் உள்ளிட்ட பகுதியில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளி, கல்லூரி, அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் அவதிப்பட்டனர். 


2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்ததால் சாலை மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை மற்றும் சத்தி சாலைகளில் வாகன ஓட்டிகள்  அவதிப்பட்டனர்.

8 பேர் மீட்பு

கோவை ரெயில் நிலையம் அருகே லங்கா கார்னர் ரெயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கி நின்றது. அதை பொருட்படுத்தாமல் தனியார் பஸ் ஒன்று முன்னோக்கி சென்றது. அப்போது அந்த பஸ்சுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஏறியது. பாலத்தின் நடுவே வந்த போது பஸ்சுக்குள் தண்ணீர் புகுந்து திடீரென்று நின்றது. டிரைவர் முயற்சி செய்தும் பஸ் புறப்பட வில்லை.


பஸ்சுக்குள் தண்ணீர் தேங்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதில் பஸ்சுக்குள் இருந்த 12 பயணிகள் தண்ணீர் இறங்கி வெளியே வந்தனர். பஸ்சுக்குள் குழந்தை உள்பட 8 பேர் வெளியே வர முடியாமல் தவித்தனர். இது குறித்து தகவலின் பேரில் கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கயிறு கட்டி சென்று 8 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

சொகுசு கார் மூழ்கியது

இதேபோல் அவினாசி மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்க பாதையில் மழைநீர் வந்து கொண்டு இருந்தது. இதை அறியாமல் தொழிலதிபர் உள்பட 3 பேர் சொகுசு காரில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது சுரங்கபாதையில் அதிக அளவு தண்ணீர் தேங்கியது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழில் அதிபர் தனது காரை நிறுத்தி விட்டு வேகவேகமாக வெளியே வந்து தப்பினார். அவினாசி மேம்பாலத்தின் கீழ் செல்லும் ரெயில்வே தண்டவாளம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அவினாசி மேம்பாலத்தில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் புரூக்பீல்டு அருகே காமராஜ் நகர் பகுதியில் உள்ள ரெயில்வே பாலத்தின் கீழ், தேங்கியிருந்த மழை நீரில் சென்ற ஒரு கார் திடீரென்று நின்றது. இதனால் காரில் வந்தவர் அதை நிறுத்தி விட்டு தப்பி சென்றார். இதன் பிறகு பாலத்தின் கீழ் தேங்கிய தண்ணீர் மோட்டார் மூலம் அகற்றப்பட்டு கார் மீட்கப்பட்டது.

ரத்தினபுரி பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் சாக்கடை நீருடன் கலந்து புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்வதால் கோவை குற்றாலத் தில் தண்ணீர் கொட்டுகிறது. நொய்யல் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

போக்குவரத்து பாதிப்பு

துடியலூர் பகுதியில் நேற்று மதியம் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்தது. அதன் பிறகு ஒரு மணி நேரம் இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்தது. இதனால் துடியலூர், கவுண்டம்பாளையம், கணு வாய், இடையர்பாளையம், சோமயம்பாளையம், சின்னதடாகம், மாங்கரை, ஆனைகட்டி, பன்னிமடை, குருடம்பாளையம், தொப்பம் பட்டி, வெள்ளக்கிணர் உருமண்டம்பாளையம், கதிர்நாயக்கன் பாளையம், ஆகிய பகுதிகளில் மழை நீர் பெருக்கெடு்து ஓடியது. துடியலூர் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளுக்கு நீர்  வரத்து அதிகரித்தது. 

மேலும் மழை காரணமாக மேட்டுப்பாளையம் சாலை, சரவணம்பட்டி செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரவு 7.30 மணி அளவில் லங்கா கார்னர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் சிக்கியிருந்த பஸ், பொக்லைன் எந்திரம் மூலம் மீட்கப்பட்டது. மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த பணிகளை கோவை மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்தினர்.

மேலும் செய்திகள்