வாடகைக்கு விடப்பட்ட 16 கார்களை அடகு வைத்து ரூ.1 கோடி மோசடி
ராமநாதபுரத்தில் பலரிடம் வாடகைக்கு விட்டு பணம் தருவதாக கார்களை வாங்கி மதுரையில் அடகு வைத்து ரூ.1 கோடி வரை மோசடி செய்த அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் பலரிடம் வாடகைக்கு விட்டு பணம் தருவதாக கார்களை வாங்கி மதுரையில் அடகு வைத்து ரூ.1 கோடி வரை மோசடி செய்த அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாடகை கார்கள்
ராமநாதபுரம் வம்பன் சந்து பகுதியை சேர்ந்தவர், முனியசாமி (வயது45). இவர் ஒப்பிலான் மாரியூர் பகுதியை சேர்ந்த யாசின் என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் கார் வாங்கி ஓட்டி வந்துள்ளார்.
இவரிடம் ராமநாதபுரம் கோட்டைமேடு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (27), சிகில் ராஜவீதியை சேர்ந்த கார்த்திக் (30) ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் 3-ந்தேதி வந்து வாடகைக்கு கார் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிய முனியசாமி கார் வாடகைக்கு கொடுத்துள்ளார். இதற்கான வாடகையை 2 தவணைகளில் கொடுத்துள்ளனர். இதனால் நம்பிக்கை ஏற்பட்ட நிலையில் மேலும் வாடகைக்கு கார்கள் ஏற்பாடு செய்து கொடுத்தால் உரிய பணம் தருவதாக கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து முனியசாமி அவருக்கு தெரிந்தவர்களிடம் கூறி கார்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இந்த கார்களை மேற்கண்ட கார்த்திக்கின் அண்ணன் இளையராஜாவிடம் (39) வழங்கி, வாடகைக்கு விட கொடுத்தார்களாம்.
அதிர்ச்சி
இந்த நிலையில் திடீரென்று கார்களுக்கான வாடகையை கொடுக்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர். இதனால் கார்களின் உரிமையாளர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இந்த சூழ்நிலையில் கார் உரிமையாளர் ஒருவர், மேற்கண்டவர்களிடம் வாடகைக்கு விட்ட தனது கார் மதுரையில் விற்பனைக்கு உள்ளதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து விசாரித்தபோது இளையராஜா, அவருடைய தம்பி கார்த்திக், சுப்பிரமணியன் ஆகிய 3 பேரும் சேர்ந்து அந்த காரை மதுரையில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளதும், பணத்தை திரும்ப கொடுக்காததால் கார் ஏலத்துக்கு வந்திருப்பதும் அதன் உரிமையாளருக்கு தெரியவந்தது.
உல்லாசம்
இதுதவிர ராமநாதபுரம் மாவட்டத்தில் பலரிடம் இதுபோன்று கார்களை வாடகைக்கு வாங்கி அதனை மதுரை செல்லூர் பகுதியில் அடகு வைத்துவிட்டு, சீட்டு விளையாடி உல்லாசமாக பொழுதை கழித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து காரின் உரிமையாளர்கள், மேற்கண்டவர்கள் மீது ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து இளையராஜா உள்பட 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
இவர்களிடம் நடத்திய விசாரணையில் மொத்தம் 16 பேரிடம் இதுபோன்று கார்களை வாங்கி மதுரையில் ரூ.1 கோடி வரை அடகு வைத்துள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித், சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவஞானபாண்டியன், முத்துராமன் ஆகியோர் விரைந்து சென்று கார்களை பறிமுதல் செய்து ராமநாதபுரம் கொண்டு வந்தனர்.
கைதான 3 பேரும் ராமநாதபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.