வயல்வெளிகளில் மீனவர்களாக மாறிய விவசாயிகள்

ராமநாதபுரம் அருகே வைகை அணையில் இருந்து வந்த வெள்ள நீர் புகுந்து வயல்வெளிகளில் உள்ள பயிர்களை மூழ்கடித்தது. இதனால் வயல்வெளிகளில் நிறைந்திருந்த வெள்ள நீரில் விவசாயிகள் மீன்பிடிக்கும் மீனவர்களாக மாறினர்.

Update: 2021-12-04 16:55 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே வைகை அணையில் இருந்து வந்த வெள்ள நீர் புகுந்து வயல்வெளிகளில் உள்ள பயிர்களை மூழ்கடித்தது. இதனால் வயல்வெளிகளில் நிறைந்திருந்த வெள்ள நீரில் விவசாயிகள் மீன்பிடிக்கும் மீனவர்களாக மாறினர்.
உபரிநீர்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதாலும் வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும் வைகை அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் ராமநாதபுரம் மாவட்டத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வந்துகொண்டிருக்கிறது. 
ராமநாதபுரம் அருகே காருகுடி பகுதியில் கடலில் கலக்கும் இடத்திலும் அதற்கு முன்னதாகவும் வைகை ஆற்று பகுதி குறுகிவிட்டதால் தண்ணீர் வடிந்து அருகில் உள்ள ஊர் களுக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்தது. பல கிராமங் களுக்குள் புகுந்த வெள்ளநீர் குடியிருப்புகளை சூழ்ந்ததோடு வயல்வெளிகளையும்,  தரைப்பாலத்தையும், சாலைகளையும் மூழ்கடித்தது. 
வெள்ளக்காடானது
இந்த வெள்ளத்தினால் குறிப்பாக அந்த பகுதிகளில் உள்ள 3 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த மிளகாய், நெல் விவசாயம் அடியோடு அழிந்தது. பயிர்கள்அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கி வெளியில் தெரியாத வகையில் அவல நிலையில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை பச்சை போர்வை போர்த்தியதுபோன்று காணப்பட்ட இந்த பகுதி எல்லாம் தற்போது வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. 
வயல்வெளிகள் வைகை வெள்ள நீரில் மூழ்கியதால் பயிரிடப்பட்ட விவசாயம் பாழாகி போனதே என்று விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர். அதிகாலையில் எழுந்து பாடுபட்டு உழைத்து பயிராக்கிய அனைத்தும் பாழாய்போனதே என்று  கண்ணீர்வடித்தனர்.
நெல்மணிகள், மிளகாய் பழங்கள் காய்த்து தொங்கும் என்று நினைத்து காத்திருந்த வேளையில் வைகை வெள்ளத்தால் தங்களின் வயல்வெளிகளில் மீன்கள் துள்ளி குதிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
வைகை அணையில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த தண்ணீரில் ஏராளமான மீன்கள் அடித்து வரப்பட்டுள்ளன. இந்த மீன்கள் வயல்வெளிகளில் தேங்கிய வெள்ளநீரில் ஏராளமாக துள்ளி குதித்து வருகின்றன. இதனை கண்ட விவசாயிகள் வெள்ளத்தால் விவசாயம்தான் கைகொடுக்கவில்லை இன்றைய உணவு தேவைக்கு மீன்களாவது கிடைக்கிறதே என்று கருதி தங்களின் வயல்வெளிகளில் ஏர்பிடித்த கைகளால் தூண்டில் வைத்து மீன்பிடிக்க தொடங்கி உள்ளனர்.
வேதனை 
வைகை வெள்ள நீர் புகுந்து விவசாயம் அழிந்ததால் வேறு வழியின்றி விவசாயிகள் தூண்டில் வைத்து மீன்பிடித்து மீனவர்களாக மாறிவிட்டனர். 
இவ்வாறு காருகுடி, சித்தூர், காவனூர் பகுதி விவசாயிகள் வயல்வெளிகளில் மட்டுமல்லாது வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் பல பகுதிகளிலும், சாலைகளிலும், கண்மாய்களிலும் தூண்டில் போட்டு மீன்பிடிக்கும் மீனவர்களாகி விட்டனர். ஒருபுறம் மீன்பிடிப்பது ரசிப்பதாக இருந்தாலும் விவசாயிகளின் நிலையை கண்டால் மனம் வேதனை அளிப்பதாக உள்ளது.

மேலும் செய்திகள்