கள்ளக்குறிச்சி விரைவில் வளர்ச்சிபெற்ற மாவட்டமாக மாறும் நிலை வரும் அமைச்சர் எ வ வேலு பேச்சு
கள்ளக்குறிச்சி மாவட்டம் விரைவில் வளர்ச்சிபெற்ற மாவட்டமாக மாறும் நிலைவரும் என அமைச்சர் எ வ வேலு கூறினார்
திருக்கோவிலூர்
தொடக்க விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் 2 புதிய வழித்தடங்களில் அரசு பஸ் போக்குவரத்து தொடக்க விழா மணலூர்பேட்டை பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மணிகண்னன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், துணைத் தலைவர் வக்கீல் தங்கம், ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் தசரதன் வரவேற்றார்.
விழாவில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு 2 புதிய வழித்தடங்களில் அரசு பஸ் போக்குவரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:-
ஒத்துழைக்க வேண்டும்
திருவண்ணாமலையிலிருந்து மணலூர்பேட்டை வழியாக கள்ளக்குறிச்சி சென்று வர அரசு பஸ் வசதி இல்லை என இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக இப்போது பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலையிலிருந்து தியாகதுருகம், விருகாவூர் அடரி, வேப்பூர் வழியாக திருச்சிக்கு ஒரு புதிய பஸ் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடங்களில் செல்லும் அரசு பஸ்கள் கண்டிப்பாக லாபத்தில் இயங்கும் வகையில் தொழிலாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் ரூ.600 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சீரடையும். தற்போது இங்கு தொடங்கப்பட்டு இருக்கும் 2 வழித்தடங்களும் கிராமத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தகவலை தெரிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் மகிழ்ச்சி அடைவார்.
மாபெரும் வளர்ச்சி
இது போன்று பல்வேறு திட்ட பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வளர்ச்சி பெற்ற மாவட்டமாக மாறும் நிலை வரும். குறிப்பாக மணலூர்பேட்டை பேரூராட்சி வரும் காலத்தில் மாபெரும் வளர்ச்சி அடையும். இது கட்டாயம் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார். விழாவில் திருக்கோவிலூர் ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சிஅரசகுமார், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் மேலந்தல் பாரதிதாசன், ராஜேந்திரன், வைத்தியநாதன், ராஜவேல், பெருமாள், நகர முன்னாள் செயலாளர் தெய்வசிகாமணி, நகர நிர்வாகி தவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மணலூர்பேட்டை நகர செயலாளர் வக்கீல் எம்.ஜெய்கணேஷ் நன்றி கூறினார்.