தமிழக-கேரள எல்லையில் 2 தவணை தடுப்பூசி செலுத்தாத அய்யப்ப பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்

தமிழக கேரள எல்லையில் 2 தவணை தடுப்பூசி செலுத்தாத அய்யப்ப பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று உத்தமபாளையத்தில் நடந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Update: 2021-12-04 15:17 GMT
உத்தமபாளையம்:
தமிழக-கேரள எல்லையில் 2 தவணை தடுப்பூசி செலுத்தாத அய்யப்ப பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று உத்தமபாளையத்தில் நடந்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
ஆலோசனை கூட்டம் 
உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆர்.டி.ஓ. கவுசல்யா தலைமை தாங்கினார். உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுனன், ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சுகாதாரத்துறை, வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மின்வாரிய அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜையையொட்டி தமிழகத்தில் இருந்தும், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்வது வழக்கம். அவ்வாறு வரும் அய்யப்ப பக்தர்களை தமிழக-கேரள எல்லை பகுதிகளான குமுளி, கம்பம்மெட்டு பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்படும். அப்போது 2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை காண்பிக்கும் அய்யப்ப பக்தர்கள் மட்டுேம கேரளாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தடுப்பூசி செலுத்தாத பக்தர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். 
ஒளிரும் குச்சிகள்
மேலும் குமுளி, கம்பம்மெட்டு மலைப்பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும். கூடலூர், லோயர்கேம்ப் மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் பக்தர்களுக்கு போதிய அளவில் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி செய்து கொடுக்கப்படும். பாதயாத்திரை பக்தர்களுக்கு வீரபாண்டியில் இருந்து ஒளிரும் குச்சிகள் வழங்கப்படும். அங்கு பக்தர்கள் வசதிக்காக தகவல் மையமும் திறக்கப்படும். இதுதவிர பக்தர்கள் சுருளி அருவி, முல்லைப்பெரியாற்றில் குளிப்பதற்கு அனுமதி இல்லை என்பது உள்பட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் செய்திகள்