467 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

ஈரோடு மாவட்டத்தில் 467 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. ஒமைக்ரான் தொற்று அச்சம் காரணமாக பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.;

Update: 2021-12-04 15:05 GMT
ஈரோடு மாவட்டத்தில் 467 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. ஒமைக்ரான் தொற்று அச்சம் காரணமாக பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தடுப்பூசி முகாம்
கொரோனா 2-வது அலை ஏற்படுத்திய தாக்கம் பொதுமக்களை அதிகமாக பாதிப்படைய செய்தது. உயிரிழப்பு, பொருளாதார நெருக்கடி என பல்வேறு துயரங்களை சந்திக்க நேர்ந்தது. இதனால் 3-வது அலை பாதிப்பை முன்கூட்டியே உணர முடிந்தது. எனவே பொதுமக்கள் தேடி தேடி சென்று கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொண்டார்கள். தடுப்பூசி தட்டுப்பாடும் அதிகமாக நிலவியது.
அதன்படி தடுப்பூசியின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டதால் சுலபமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடுவதன் இலக்குடன் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14½ லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளார்கள்.
ஒமைக்ரான் அச்சம்
இந்தநிலையில் 13-வது கட்டமாக கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று நடத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் 467 மையங்களில் இந்த முகாம் நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். இதுவரை முதல் தடுப்பூசியும் போட்டுக்கொள்ளாத பலர் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொரோனா தடுப்பூசி முகாமில் கடந்த சில நாட்களாக கூட்டம் இல்லாமல் இருந்தது. ஆனால் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் தற்போது இருந்தே பரவியுள்ளது.
 கர்நாடகா மாநிலத்தில் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால், அண்டை மாநிலமான தமிழ்நாட்டிலும் பரவி விடுமோ என்கிற அச்சம் உள்ளது. இதன்காரணமாக ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் மெத்தனமாக இருந்தவர்கள் தற்போது ஆர்வமாக வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதை காணமுடிகிறது.
 ஈரோட்டில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்”, என்றார்.

மேலும் செய்திகள்