சீர்காழியில் வாய்க்காலை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் பெரப்பன்னி வாய்க்காலை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-04 14:46 GMT
சீர்காழி:-

சீர்காழியில் பெரப்பன்னி வாய்க்காலை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பெரப்பன்னி வாய்க்கால்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கழுமலையாறு பாசன வாய்க்காலின் ஒரு பிரிவு வாய்க்காலாக பெரப்பன்னி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை நம்பி ஊழியக்காரன் தோப்பு, ஈசானிய தெரு, கோவிந்தராஜன் நகர், மனத்திடல், கோவிலான்தெரு, காடுவெட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். இந்த பகுதியில் ஏராளமான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வாய்க்காலாக பெரப்பன்னி வாய்க்கால் உள்ளது. இந்த பாசன வாய்க்காலை கடந்த சில ஆண்டுகளாக பொதுப்பணித்துறையினர் தூர்வாராததால், வாய்க்கால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, புதர் மண்டி கிடப்பதாகவும், பாசன நீர் செல்ல வழியில்லாமல் உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

ஆர்ப்பாட்டம்

மேற்கண்ட வாய்க்காலை தூர்வாரக்கோரி கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள் பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுநாள்வரை தூர்வாரப்படாததால் ஏமாற்றம் அடைந்த விவசாயிகள் சீர்காழி கொள்ளிடம் கூட்டில் உள்ள கழுமலை ஆற்றுப் பாலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெரப்பன்னி வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்