மடத்துக்குளத்தில் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள்
மடத்துக்குளத்தில் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள்
உடுமலை,
மடத்துக்குளத்தில் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகள் தொடங்கியது. இதில் 400-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
மாநில அளவில் சிலம்ப போட்டிகள்
தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்கம், பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் கல்ச்சுரல் அண்ட்சேரிட்டபிள் டிரஸ்ட், திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்ப சங்கம் ஆகியவற்றின் சார்பில், மாநில அளவில் 14-வது சைலாத் சிலம்ப போட்டிகள் மடத்துக்குளம் அருகே சோழமாதேவி மேடு பகுதியில் உள்ள அக்சரா வித்யாமந்திர் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சியில் பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு களரிப்பயட்டு அசோசியேசன் திருப்பூர் மாவட்ட சைலாத் சிலம்ப சங்க செயலாளர் எஸ்.வீரமணி ஆசான் வரவேற்று பேசி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார். திருவள்ளூர் மாவட்ட சைலாத் சிலம்ப சங்க செயலாளர் ஐ.மஸ்தான் ஆசான் சைலாத் சிலம்ப கொடியை ஏற்றிவைத்தார்.
அக்சரா வித்யா மந்திர் தொடக்கப்பள்ளி தலைவர் எஸ்.முருகேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.எம்.சாதிக்பாஷா, உடுமலை நூலகர் வீ.கணேசன், இ.சிவக்குமார், விவேகானந்தா வித்யாலயா பள்ளி தாளாளர் செ.மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
400 வீரர்கள், வீராங்கனைகள்
போட்டிகளை மடத்துக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயத்ரி, அக்சரா வித்யா மந்திர் தொடக்கப்பள்ளி செயலாளர் சண்முகப்பிரியா ஆகியோர் தொடங்கி வைத்தனர். முன்னதாக சிலம்பவீரர்கள், வீராங்கனைகள் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை தமிழ்நாடு சைலாத் சிலம்ப சங்க செயலாளர் குமரி கணேசன் ஏற்றுக்கொண்டார்.
போட்டிகள் தொடக்க நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், கோவை ஹக்கீம், ஆடிட்டர் சண்முகவடிவேல், கோவை டி.பழனியப்பா பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாநில அளவில் நடக்கும் இந்த போட்டிகளில் 18 மாவட்டங்களைச்சேர்ந்த 400 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்
4 பிரிவுகளில் போட்டிகள்
போட்டிகள் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் ஆகிய 4 பிரிவுகளில், எடைப்பிரிவு அடிப்படையில் நெடுங்கம்பு, நடுக்கம்பு, சைலாத், தொடுமுறை ஆகிய 4 வகைகளில் நடைபெற்று வருகிறது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதிப்போடிகளும், பரிசளிப்பு விழாவும் நடக்கிறது.