டேன்டீ அலுவலகத்தை உடைத்த காட்டுயானைகள்

கூடலூர் அருகே டேன்டீ அலுவலகத்தை காட்டுயானைகள் உடைத்தன.

Update: 2021-12-04 14:17 GMT
கூடலூர்

கூடலூர் அருகே டேன்டீ அலுவலகத்தை காட்டுயானைகள் உடைத்தன. 

காட்டுயானைகள் அட்டகாசம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் விநாயகன் என்ற காட்டுயானை ஊருக்குள் புகுந்து வீடுகள், விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. பின்னர் முதுமலையில் இருந்து கும்கிகள் வரவழைக்கப்பட்டு, வனத்துறை மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இதனால் விநாயகன் யானை ஊருக்குள் வரவில்லை. 

ஆனால் கேரள வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வந்த காட்டுயானை பாடந்தொரை, செளுக்காடி உள்பட பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து முகாமிட்டு வருகிறது. அப்போது வீடுகளை குறி வைத்து குட்டியானை உடைத்து சேதப்படுத்துகிறது. மேலும் அரிசி உள்ளிட்ட தானியங்களை தின்று பழகி விட்டது. இதன் காரணமாக அதனை குட்டி அரிசி ராஜா என்று பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

பயிர்கள் நாசம்

இந்த யானைகளை கட்டுப்படுத்த முதுமலையில் இருந்து சீனிவாசன், வசிம் ஆகிய கும்கிகளை கொண்டு வந்து வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. காட்டுயானைகளின் அட்டகாசம் தொடர்கிறது. 

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாடந்தொரை அருகே கர்க்கப்பாலி பகுதியில் குட்டியுடன் காட்டுயானை புகுந்தது. பின்னர் அதே பகுதியை சேர்ந்த தாமஸ் என்பவரது தோட்டத்துக்குள் புகுந்து மரவள்ளிக்கிழங்கு செடிகளை மிதித்தது. இதில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான மரவள்ளிக்கிழங்கு செடிகள் நாசமானது. இதேபோன்று பிற விவசாய பயிர்களையும் காட்டு யானைகள் துவம்சம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். 

டேன்டீ அலுவலகம் சேதம்

இதையடுத்து கூடலூர் அருகே பாண்டியாறு அரசு தேயிலை தோட்ட(1-பி) பகுதியில் மற்றொரு காட்டுயானை கூட்டம் நள்ளிரவில் புகுந்தன. இதனால் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பீதியடைந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் டேன்டீ அலுவலக கட்டிடத்தை காட்டுயானைகள் முற்றுகையிட்டு உடைத்து சேதப்படுத்தின. கட்டிடத்தில் வைத்திருந்த அலுவலக கோப்புகளை துதிக்கையால் தூக்கி வெளியே வீசி எறிந்தன.

பின்னர் நேற்று விடியற்காலையில் அங்கிருந்து காட்டுயானைகள் சென்றன. அங்கு மீண்டும் காட்டுயானைகள் வர வாய்ப்பு உள்ளதால் தோட்ட தொழிலாளர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். எனவே வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கின்றனர். சேரம்பாடி அருகே சந்தனமாகுன்னுவில் நேற்று முன்தினம் இரவில் 7 காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் சுதாகரன் என்பவரது தோட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு செடிகளை மிதித்து நாசம் செய்தன.

மேலும் செய்திகள்