சப்-கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை
சப்-கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை
கோத்தகிரி
கோத்தகிரி அருகே கேர்பெட்டாவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தனியார் நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடந்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே பணி நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு போலீஸ் பாதுகாப்புடன் செல்போன் கோபுரம் அமைக்க சம்பந்தப்பட்ட நிறுவனம் சென்னை ஐகோர்ட்டின் ஆணையை பெற்றது. இதனால் தொடர்ந்து பணி நடைபெற்று முடிவடைந்தது.
அதன்பிறகு அங்கு பொருத்த கொண்டு வந்த ஜெனரேட்டரை பொருத்தவிடாமல் கிராம மக்கள் திருப்பி அனுப்பினர். மீண்டும் அங்கு கொண்டு வரப்பட்ட ஜெனரேட்டரை தீ வைத்து எரித்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் செல்போன் கோபுர பிரச்சினை தொடர்பாக சென்னை ஐகோர்டில் கிராம மக்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சுமுக முடிவை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டதாக தெரிகிறது.
அதன்படி நேற்று மாலை 5 மணிக்கு கேர்பெட்டாவில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதற்கு குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமை தாங்கினார். கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன், வருவாய் ஆய்வாளர் தீபக், கிராம நிர்வாக அலுவலர் சபீர் கான், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதுகுறித்து கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.