தேங்காய் மட்டை ஏற்றி வந்த வேன் மோதி 2 விவசாயிகள் பலி

தேங்காய் மட்டை ஏற்றி வந்த வேன் மோதி 2 விவசாயிகள் பலி;

Update: 2021-12-04 13:51 GMT
பொங்கலூர்,
பொங்கலூரில் தேங்காய் மட்டை ஏற்றி வந்த வேன் மோதியதில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2 பேர் பலி
திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த கள்ளிப்பாளையம் ஊராட்சி வளையபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 70) விவசாயி. இவர் நேற்று பொங்கலூர் வந்துவிட்டு காட்டூர் ரோடு வழியாக தனது மொபட்டில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
பொங்கலூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று அங்கிருந்து காட்டூர்ரோடு செல்ல முயன்றபோது உடுமலையில் இருந்து காங்கேயம் நோக்கி தேங்காய் மட்டைகளை ஏற்றிவந்த வேன் இவர் மீது மோதியது.
வேகமாக வந்த வேன்
பின்னர் மோதிய வேகத்தில் அந்த வேன், சாலையின் எதிர்ப்புறத்தில் பாய்ந்து சின்னக்காட்டூரை சேர்ந்த விவசாயி  கனகராஜ் (48) மீதும் மோதியது. இந்த விபத்தில் அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேன் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணம் என்று அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.
டிரைவர் கைது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவினாசிபாளையம் போலீசார் விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தின் காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேனை ஓட்டி வந்த உடுமலை காரத்தொழுவை சேர்ந்த பிரகாஷ் குமாரை (26) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்