அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 54 படுக்கைகள் கொண்ட ஒமைக்ரான் சிறப்பு வார்டு
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 54 படுக்கைகள் கொண்ட ஒமைக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
அடுக்கம்பாறை
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 54 படுக்கைகள் கொண்ட ஒமைக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் பரவல்
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் புது வகையான ஒமைக்ரான் தற்போது பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சிலருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வேலூருக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலையில் கூடுதல் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் ஒமைக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 50 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீவிர சிகிச்சைக்கு என 4 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது.
சிறப்பு வார்டு
ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படும் பட்சத்தில் அந்த நபரை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் அதற்கென தனியாக டாக்டர்களும், செவிலியர்களும் நியமிக்கப்பட்டு அவர்கள் அங்கு மட்டும் பணிபுரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தும் வசதி, தீவிர சிகிச்சை வசதி, ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டர் வசதி என அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் 500 படுக்கைகள் கொண்ட கொரோனா வார்டு உள்ளது. ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அவற்றையும் சிறப்பு வார்டாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.