எண்ணூர் துறைமுகம் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு
மீஞ்சூர் அருகே எண்ணூர் துறைமுகம் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீஞ்சூர்,
மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 4.5 கிலோ மீட்டர் நீளத்திற்கு எண்ணூர் துறைமுகம் சாலை செல்கிறது. இந்த சாலை 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. கடந்த மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கிறது. இதனால் சாலை பெருத்த சேதம் அடைந்து பொதுமக்கள் சென்று வரமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து நேற்று பொதுமக்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பழுதான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.