இந்திய பெரும் கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பை மேற்கொள்ள ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு மானியம்

இந்திய பெரும் கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பை மேற்கொள்ள ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-12-04 08:34 GMT
திருவள்ளூர்,

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2020-2021-ன் கீழ் பல்நோக்கு பண்ணை குட்டைகளில் கூட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பு ஊக்குவித்தல் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ. 25 லட்சத்து 25 ஆயிரம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் மீன் வளர்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டு மீன் வள உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பல்நோக்கு பண்ணை குட்டைகளில் கூட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பை மேற்கொள்ள ஆர்வமுள்ள பயனாளிகளுக்கு ஏற்கனவே 1,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குளம் புனரமைத்தல் மற்றும் கூட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன்களுடன் நன்னீர் இறால் வளர்ப்பை மேற்கொள்ள ஆகும் செலவினம் ஆக மொத்தம் ரூ.62 ஆயிரத்து 500-ல் 40 சதவீதம் மானியமாக ஓரளவுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கி திட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி இயக்குனர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, திருவள்ளூர். (இருப்பு) பொன்னேரி எண் 5, சங்கர் நகர், பாலாஜி தெரு, வேண்பாக்கம், பொன்னேரி. தொலைபேசி எண் 044-27972457 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்