அடிப்படை வசதி கேட்டு அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
அடிப்படை வசதி கேட்டு அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்
சேலம், டிச.4-
சேலம் அம்மாபேட்டையில் மாருதிநகர், ஓந்தாபிள்ளை காடு, அப்துல்கலாம் நகர் போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் மழைநீர், கழிவுநீர் தேங்குவதாகவும், குப்பைகள் சரிவர அகற்றாமல் இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்தநிலையில் இந்த குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், அடிப்படை வசதிகள் கேட்டும் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று சேலம் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்துக்கு பாய், தலையணை, குடம் போன்றவற்றுடன் வந்து திடீரென குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் குடியேறும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.