ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 12 படுக்கைகள் அமைப்பு
ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தனித்தனி அறைகளில் 12 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம்,
ஒமைக்ரான் வைரஸ்
கொரோனா வைரஸ் என்ற கொடிய நோய் கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களையே அச்சுறுத்தி வருகிறது. இதன் பாதிப்பு இன்னும் முழுமையாக குறையாத நிலையில், அந்த வைரஸ் உருமாறி மக்களை ேமலும் பீதி அடைய செய்கிறது.
தற்போது புதிய வகை கொரோனா வைரசாக ஒமைக்ரான் என்ற வைரஸ் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவில் 2 பேர் ஒமைக்ரான் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுரை வழங்கி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
12 படுக்கைகள்
மேலும் இந்த நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு ஆஸ்பத்திரிகளில் முன் ஏற்பாடு நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்டத்தில் ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தனியாக 12 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒவ்வொரு அறையிலும் ஒரு படுக்கை என மொத்தம் 12 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஆஸ்பத்திரி டீன் வள்ளிசத்தியமூர்த்தி கூறும் போது, ஒமைக்ரான் வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 12 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளான அடிக்கடி கைகழுவுதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், முககவசம் அணிதல் ஆகியவற்றை கடைபிடித்தால், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பை தடுக்கலாம் என்று கூறினார்.