சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 6-ந் தேதி பட்டமளிப்பு விழா கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 6-ந் தேதி பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.

Update: 2021-12-03 21:49 GMT
கருப்பூர்,
பட்டமளிப்பு விழா
சேலம் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் 2019- 2020, 2020-2021 ஆகிய கல்வி ஆண்டுகளில் படித்து முடித்த மாணவ- மாணவிகள், ஆராய்ச்சி மாணவர்கள் என 1 லட்சத்து 53 ஆயிரத்து 992 பேருக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது.
இதற்கான பட்டமளிப்பு விழா நாளை மறுநாள் (6-ந் தேதி) பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10 மணிக்கு நடக்கிறது.
கவர்னர் பங்கேற்பு
விழாவுக்கு பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக கவர்னருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் கா.பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறார். இந்திய அறிவியல் நிறுவன இயக்குனர் கோவிந்தன் ரங்கராஜன், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.
விமானம் மூலம் வருகிறார்
முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவி, நாளை மறுநாள் காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு மதியம் 1 மணிக்கு வருகிறார். அவரை சேலம் கலெக்டர் கார்மேகம் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்கின்றனர். தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். விழா முடிந்து மீண்டும் சென்னை புறப்பட்டு செல்கிறார்.ஏற்பாடுகளை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், தேர்வாணையர் (பொறுப்பு) கதிரவன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள்,  பட்டமளிப்பு விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்