அகதிகள் தப்பி செல்ல உதவியதாக மேலும் ஒருவர் கைது

குமரி கடல் வழியாக அகதிகள் தப்பி செல்ல உதவியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் இலங்கையை சேர்ந்தவர்.

Update: 2021-12-03 21:25 GMT
நாகர்கோவில்:
குமரி கடல் வழியாக அகதிகள் தப்பி செல்ல உதவியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் இலங்கையை சேர்ந்தவர்.
அகதிகள் தப்பிய விவகாரம்
குமரி மாவட்டம் குளச்சல் கடல் வழியாக கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை அகதிகள் 60 பேர் படகு மூலமாக இலங்கைக்கு தப்பி சென்றதாக பரபரப்பு தகவல் வெளியானது.
இந்த சம்பவம் பற்றி கியூ பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடல் வழியாக தப்பிச் சென்றது வெளி மாவட்டங்களில் வசிக்கும் இலங்கை அகதிகள் என்பதும், தப்பி செல்ல முயன்ற போது வேறொரு நாட்டின் கடற்படையினரிடம் அவர்கள் சிக்கியதும் தெரியவந்தது.
மேலும் ஒருவருக்கு தொடர்பு
அதோடு 60 பேரும் தப்பி செல்வதற்காக படகு தயார் செய்து கொடுத்தது குளச்சல் இயேசு காலனியை சேர்ந்த மீனவரான ஜோசப்ராஜ் (வயது 54) என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து ஜோசப்ராஜை கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும் அகதிகள் தப்பி செல்வதற்கு வேறு யாரும் உதவி செய்து இருக்கிறார்களா? எனவும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தமிழகத்தில் வசித்து வரும் இலங்கையை சேர்ந்த சுகந்தன் (வயது 33) என்பவர் உதவி செய்த தகவல் வெளியானது.
புழல் ஜெயிலில்
இதை தொடர்ந்து சுகந்தன் யார்? அவர் எங்கு வசித்து வருகிறார்? என்ற விவரங்களை கியூ பிரிவு போலீசார் சேகரித்தனர். இந்தநிலையில் அவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னையில் உள்ள புழல் ஜெயிலில் உள்ளார் என்பது தெரியவந்தது. எனவே சுகந்தனை காவலில் எடுத்து விசாரணை நடத்த கியூ பிரிவு போலீசார் முடிவு செய்தனர். இதற்காக கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இதனையடுத்து புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சுகந்தனை போலீசார் நேற்று முன்தினம் குமரி மாவட்டம் அழைத்து வந்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
பின்னர் மனுவை விசாரித்த கோர்ட்டு சுகந்தனை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி போலீசார் சுகந்தனை காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது இலங்கை அகதிகள் தப்பி செல்வதற்கு சுகந்தனும் உதவியாக இருந்த தகவல் உறுதியானது.
கைது
எனவே சுகந்தனும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் தமிழகத்தில் வசித்து வரும் இலங்கை அகதிகள் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லவும் அவர் முக்கிய நபராக செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் தற்போது வரை 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் மேலும் சிலருக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. எனவே சுகந்தனிடம் போலீஸ் சார்பில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர் கொடுத்த தகவலின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கையில் கியூ பிரிவு போலீசார் ஈடுபட உள்ளனர்.

மேலும் செய்திகள்