மாவட்டத்தில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி என்ற நிலை எட்டப்படும்-அமைச்சர் மூர்த்தி உறுதி
மதுரை மாவட்டம் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற நிலை விரைவில் எட்டப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
மதுரை,
மதுரை மாவட்டம் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற நிலை விரைவில் எட்டப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
கொரோனா தடுப்பூசி மற்றும் ஒமைக்ரான் தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மடீட்சியா அரங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் பூமிநாதன், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் குடியிருப்போர் நலசங்க பிரதிநிதிகள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், டாக்டர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா நோய்த் தொற்றின் 2-வது அலையின்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்தபோது நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து காப்பாற்ற ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் உடனடியாக ஏற்படுத்தப்பட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டபோது பிற மாநிலங்களிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
விமான நிலையங்கள்
மாவட்டத்தில் 4 ஆயிரம் சுய உதவிக்குழு உறுப்பினர்களைக் கொண்டு அனைத்து ஊராட்சிகளிலும் வீடுவீடாகச் சென்று நோய்த் தொற்று அறிகுறிகளை கண்டறிந்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதன் மூலம் கொரோனா நோய்த் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதுபோன்று நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பிற மாவட்டங்களுக்கு மதுரை மாவட்டம் முன்மாதிரியாக செயல்பட்டது. ஆனால் தற்போது தடுப்பூசி செலுத்தும் பணியில் மதுரை மாவட்டம் சற்று பின் தங்கியுள்ளது. இந்த நிலை மாற்றப்பட்டு விரைவில் மதுரை மாவட்டம் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டம் என்ற நிலை எட்டப்படும். ஒமைக்ரான் வைரஸ் காரணமாக 13 நாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு விமான நிலையத்தில் முழு பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பரிசோதனையில் தொற்று உறுதியானால் அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
சான்றிதழ்
முன்னதாக மதுரை மாநகராட்சி சார்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தியதில் சிறப்பாக பணிபுரிந்த செவிலியர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாட்டார்மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசனுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டன.