கள்ளக்காதல் வீட்டில் தெரிந்ததால் 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை; கள்ளக்காதலனும் சாவு

துமகூருவில் கள்ளத்தொடர்பு விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததால் 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவரது கள்ளக்காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2021-12-03 20:42 GMT
துமகூரு: துமகூருவில் கள்ளத்தொடர்பு விவகாரம் வீட்டுக்கு தெரிந்ததால் 2 குழந்தைகளின் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த அவரது கள்ளக்காதலனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

கள்ளத்தொடர்பு

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகா கீரசக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட லட்சுமியம்மா (வயது 26). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். வெங்கட லட்சுமியம்மாவின் கணவர் சொந்தமாக டிராக்டர் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். அவரிடம், அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்த்குமார் (27) என்பவர் தொழிலாளியாக வேலை செய்தார். வீட்டு வேலைகளையும் ஆனந்த்குமார் செய்து வந்திருந்தார்.

இந்த நிலையில், ஆனந்த்குமாருக்கும், வெங்கட லட்சுமியம்மாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தனது கணவர் வீட்டில் இல்லாத போது வெங்கட லட்சுமியம்மாவும், ஆனந்த்குமாரும் உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது கள்ளத்தொடர்பு விவகாரம், வெங்கட லட்சுமியம்மாவின் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

2 பேரும் தற்கொலை

உடனே அவர்கள், வெங்கட லட்சுமியம்மாவை கண்டித்துள்ளனர். மேலும் ஆனந்த்குமாரையும் வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர். கள்ளக்காதல் விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிந்து பிரச்சினை ஏற்பட்டதால் மனம் உடைந்த வெங்கட லட்சுமியம்மா தனது வீட்டில் விஷத்தை குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதலி தற்கொலை செய்ததால், ஆனந்த்குமாரும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த கொரட்டகெரே போலீசார் விரைந்து சென்று வெங்கட லட்சுமியம்மா, ஆனந்த்குமாரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கள்ளத்தொடர்பு விவகாரத்தில் 2 பேரும் தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கொரட்டகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்