தஞ்சை மக்களின் கண்ணை கவரும் டெரகோட்டா பொம்மைகள்
குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு தஞ்சையில், சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள டெரகோட்டா பொம்மைகள் தஞ்சை மக்களை கவர்ந்துள்ளன.
தஞ்சாவூர்:
குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு தஞ்சையில், சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள டெரகோட்டா பொம்மைகள் தஞ்சை மக்களை கவர்ந்துள்ளன.
மண் பொம்மைகள்
கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட பிழைப்புக்காக தங்களுக்கு அருகில் கிடைக்கும் மூலப்பொருட்களை கொண்டு பயன்பாட்டு பொருட்களை தயாரிப்பது கைவினை கலைகளாகும். களிமண்ணை அச்சுகளில் பரப்பி செய்யப்படும் சிறு, சிறு மண் பொம்மைகள் பல்வேறு வண்ணங்கள் பூசப்பட்டு வீடுகளில் அலங்கார பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன.
தஞ்சையின் அடையாளமாக விளங்கும் தலையாட்டி பொம்மைகளும் களிமண்ணால் செய்யப்படுபவையாகும். இந்த பொம்மைகள் தஞ்சையின் கலை மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றி வருகின்றன. காவிரி ஆற்றின் களிமண் கொண்டு செய்யப்படும் இந்த பொம்மைகள் உலக புகழ் பெற்றவையாகும்.
டெரகோட்டா பொம்மைகள்
இதேபோல் டெரகோட்டா ெபாம்மைகளும் சிறப்பு வாய்ந்தவையாகும். சுடுமண் சிற்பங்கள்(டெரகோட்டா) என்பவை களிமண்ணால் சிற்பம் செய்து பக்குவமாக உலர வைத்து சூளையில் சுட்டெடுத்து செய்யப்படும் உறுதியான சிற்பங்களாகும். அவ்வாறு சுட்ட மண் சிற்பம் என்பதால் சுடுமண் சிற்பம் எனப்படுகிறது. மண்பாண்டங்களும் இந்த முறையிலேயே செய்யப்படுகின்றன. இந்த வகையில் செய்யப்படும் சிற்பங்களும், பாண்டங்களும் எளிதில் தேயாது.
இந்த சிற்பங்களில் பலவகை வண்ணங்களை பூசுவார்கள். சுடுமண் சிற்பங்கள் இந்தியாவில் தொன்று தொட்டு செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சுடுமண் சிற்பங்கள் செய்யப்படுகின்றன. மண்ணால் சிற்பம் செய்வது உலகம் முழுவதும் பரவி இருந்த ஒரு வகை பண்டைய கலையாகும். இது மண்ணை தண்ணீருடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவங்களை உருவாக்கி, பின் அதை சூளையில் வேகவைத்து பல்வேறு வடிவங்களை செய்யும் அபூர்வமான கலையாகும்.
அலங்கார பொருட்கள்
பண்டைய காலங்களில் மண்ணில் செய்யப்படும் அலங்கார பொருட்களை அணிவதில் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினர். அரசியல் நிகழ்வுகள், பிரபலமான மனிதர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் சுடுமண் சிற்பங்களாக அந்த கால மக்கள் உருவாக்கினர். காலப்போக்கில் இத்தகைய சிற்பங்களின் பயன்பாடு குறைந்து விட்டன. இதனால் அதன் உற்பத்தியும் குறைந்து விட்டது.
தற்போது கட்டப்படும் வீடுகளில் அலங்கார பொருட்களாக சுடுமண் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அலங்கார தோரணங்கள், சாமி சிலைகள், விலங்குகள், சூரிய முகத்துடன் கூடிய சிற்பங்கள் என ஏராளமான சுடுமண் சிற்பங்கள் வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அத்தகைய சுடுமண் சிற்பங்களும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
யானை, குதிரைகள்
தஞ்சை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் தலையாட்டி பொம்மைகள் உள்பட ஏராளமான பொம்மைகள் பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து சுடுமண் சிற்பங்கள் கொண்டு வரப்பட்டு தஞ்சை மாநகர வீதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சை வல்லம் நம்பர்-1 சாலையோரத்தில் சுடுமண் சிற்பங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. யானை, குதிரை, ஒட்டகம், காளை மாடு போன்றவை அழகிய வடிவங்களுடன் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவைகள் 1 அடி முதல் 1½ அடி உயரம் கொண்டவைகளாக உள்ளன.
மக்களை கவர்ந்தது
அதேபோல் துளிசி மாடம், கிருஷ்ணர், சாய்பாபா, விநாயகர், சிவபெருமான், புத்தர் போன்ற வழிபாட்டு சிற்பங்களும், சூரிய முகத்துடன் கூடிய சிற்பம், அரிக்ேகன் விளங்கு, அலங்கார தோரணங்கள் போன்ற சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. இதேபோல் ஏராளமான சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சிற்பங்கள் ரூ.100 முதல் ரூ.3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
அந்த வழியாக கார்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை இந்த சிற்பங்கள் மிகவும் கவர்ந்துள்ளன. இதனால் பலர் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விட்டு வந்து சிற்பங்களின் விலை என்ன? என்பதை கேட்டறிவதுடன் சிலர் தங்களுக்கு பிடித்த சிற்பங்களை வாங்கி செல்கின்றனர்.