தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூர்:
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை அறிவித்து தமிழகஅரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் கோப்பைகள், அனைத்து அளவிலான மற்றும் தடிமன் கொண்ட கைப்பைகள், நெய்யப்படாத பிளாஸ்டிக் கைப்பைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் தாள்கள், பைகள், பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உரிஞ்சு குழல்கள் மற்றும் பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிக்கப்படுவதும், சேமித்து வைப்பதும், வினியோகிப்பதும், உபயோகிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டத்தில் இந்த தடையை முழுமையாக செயல்படுத்தி அடுத்தமாதம் (ஜனவரி) 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் கழிவு இல்லாத மாவட்டமாக மாற்றிட ஆய்வுக்கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அபராதம்
தஞ்சை மாவட்டத்தில் அடுத்தமாதம் 1-ந் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் அவற்றிற்கு மாற்று பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றால் நடுத்தரம் மற்றும் பெரிய கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
தகவல் தெரிவிக்கலாம்
மேலும் சுற்றுச்சூழல் மீதான அக்கறை கொண்ட பொதுமக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள், சட்ட விரோதமாக இயங்கும் அந்த தொழிற்சாலைகள் குறித்த தகவலை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், எண்.23, சிட்கோ தொழில் வளாகம், உழவர் சந்தை எதிரில், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்-613006 என்ற முகவரிக்கு நேரிலோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
மேலும் 04362-256558 என்ற எண்ணிற்கு தொலைபேசி மூலமாகவோ மற்றும் deetnj@tnpcb.gov.in என்ற மின்னஞ்சலுக்கோ தெரிவிக்கலாம். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்து மாற்று பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.