கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் பலியான முதியவர் உடல் ரகசியமாக புதைப்பு போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கள்ளக்குறிச்சி அருகே விபத்தில் பலியான முதியவர் உடல் ரகசியமாக புதைப்பு போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை;

Update: 2021-12-03 17:12 GMT
கண்டாச்சிமங்கலம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஜா.ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் முத்து(வயது 40). டிரைவரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜா.ஏந்தல் கிராமத்திலிருந்து டிராக்டரில் அடரி நோக்கி சென்று கொண்டிருந்தார். அசகளத்தூர் ஏரிக்கரை அருகே வந்தபோது சாலையை கடக்க முயன்ற 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மீது டிராக்டர் மோதியதில் அவர் படுகாயமடைந்தார். 

இதையடுத்து அவரை ஜா. ஏந்தல் பகுதியைச் சேர்ந்த தர்மதுரை(38) என்பவரின் மினி லாரியில் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்க அழைத்து சென்றபோது வழியிலேயே முதியவர் பரிதாபமாக இறந்தார். ஊர், பெயர் விவரம் தெரியாததால் போலீசுக்கு தெரியாமலேயே முதியவர் உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றிய புகாரின் பேரில் டிரைவர்கள் முத்து, தர்மதுரை ஆகியோர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். 

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி தாசில்தார் விஜய பிரபாகரன் முன்னிலையில் புதுச்சேரி பிம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர் சுனில் சுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொக்லைன் எந்திரம் மூலம் முதியவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். முதியவர் விபத்தில் காயம் அடைந்து இறந்தது தெரிய வந்ததையடுத்து உடலை அதே பகுதியில் புதைத்தனர். அப்போது வருவாய் ஆய்வாளர் பாலு, கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், தனிப்பிரிவு போலீசார் சேட்டு, கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்