ஆண்டிப்பட்டி அருங்காட்சியகத்தில் பழங்கால பொருட்கள் கண்காட்சி
ஆண்டிப்பட்டி அருங்காட்சியகத்தில் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் தேனி மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட வரலாற்று சிறப்புடைய பொருட்கள் மற்றும் பழங்கால பொருட்கள் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்களும், மாணவர்களும் பார்வையிட்டு வருகின்றனர். மேலும் இந்த அருங்காட்சியகத்தில் மாதந்தோறும் ஒரு அரிய பொருளை காட்சிப்படுத்தி, அதன் வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ளும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
அந்த வகையில் இந்த மாதம் நெல் மற்றும் தானியங்கள் சேமித்து வைக்க உதவும் பழங்கால பொருளான நெற்குதிர் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்த நெற்குதிரை ஏராளமான மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் பார்வையிட்டனர். அத்துடன் அருங்காட்சியகத்தில் இருந்த மற்ற பழங்கால பொருட்களையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இதுகுறித்து அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் கூறுகையில், நெற்குதிர் என்பது நெல், அரிசி மற்றும் சிறுதானியங்கள் சேகரிக்க பயன்படும் ஒருவகை கலம் ஆகும். நெற்குதிரை பத்தாயம், கோட்டை, சேர், கூன், குலுக்கை போன்ற பெயர்களில் அழைத்து வந்ததுடன், அதற்கேற்ப பல்வேறு வடிவங்களில் பழங்கால மக்கள் பயன்படுத்தி வந்தனர் என்றார்.