ஒரே கிராமத்தில் 5 வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு
ஒரே கிராமத்தில் 5 வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிங்கம்புணரி,
ஒரே கிராமத்தில் 5 வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 வீடுகளில் குண்டு வீச்சு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட மல்லாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஒடப்பட்டி கிராமத்தில், 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆடு, மாடுகள் மேய்க்கும் தொழில் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் ஒடப்பட்டி கிராமத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் அங்குள்ள பாண்டி, பிச்சப்பன், செல்வம், முருகானந்தன், கலைச்செல்வி ஆகிய 5 பேர் வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர். அவை பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறின.
அதில் 2 வீடுகளில் லேசாக தீப்பற்றியது. உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
போலீஸ் குவிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் எஸ்.எஸ்.கோட்டை இன்ஸ்பெக்டர் ஆண்டனி செல்லத்துரை மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பெட்ரோல் குண்டுகள் வீசிய கும்பலை தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவத்தால் அந்தபகுதியில் பதற்றம் நிலவுவதால் 20-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.