கம்பத்தில் முல்லைப்பெரியாற்றில் குளிக்க தடை
கம்பத்தில் முல்லைப்பெரியாற்றில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கம்பம்:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. அதன்படி, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 141.85 அடியாக இருந்தது. மேலும் வினாடிக்கு 3 ஆயிரத்து 954 கன அடி நீர்வரத்து உள்ளது. இதேபோல் அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தமிழக-கேரள எல்லை பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக கம்பம் பகுதியில் உள்ள முல்லைப்பெரியாற்றில் இருகரைகளை தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தநிலையில் கம்பம் பகுதிக்கு வரும் வெளியூர் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் பலரும் ஆபத்தை உணராமல் முல்லைப்பெரியாற்றில் இறங்கி குளிக்கின்றனர். இதனால் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, அவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது. இதனை தடுக்கும் வகையில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா நடவடிக்கை எடுத்துள்ளார். அதன்படி, முல்லைப்பெரியாற்றில் குளிப்பதற்கும், இறங்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைத்துள்ளார். மேலும் போலீசார் சுழற்சி முறையில் முல்லைப்பெரியாறு பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து முல்லைப்பெரியாறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.