தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
தேனி கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி:
தேனி பொம்மையகவுண்டன்பட்டி டெலிபோன் நகரை சேர்ந்த விக்ரமன் மனைவி மனோன்மணி (வயது 55). இவர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு, அவர் ஒரு பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவரிடம் போலீசார் விசாரித்தனர்.
அப்போது அவர் கூறுகையில், "எனக்கு சொந்தமான 2½ ஏக்கர் நிலத்தை பராமரிப்பதற்காக 2 பேரிடம் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் போலியான ஆவணங்களை தயாரித்து எனது நிலத்தை அபகரித்து போலியான பட்டா பெற்று மோசடி செய்துவிட்டனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது நிலத்தை மீட்டுத்தர வேண்டும்" என்றார்.
இதையடுத்து அவரை தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என்று அவரை அறிவுறுத்தி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.