கூடுதல் தொகை வசூலித்ததாக சிலிண்டர் லாரியை பொதுமக்கள் முற்றுகை
கடமலைக்குண்டு அருகே கூடுதல் தொகை வசூலித்ததாக சிலிண்டர் லாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
கடமலைக்குண்டு:
கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களுக்கு கடமலைக்குண்டுவில் செயல்படும் தனியார் ஏஜென்சி மூலம் கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக போக்குவரத்து செலவு என கூறி கியாஸ் சிலிண்டர் ஒன்றுக்கு அரசு நிர்ணயம் செய்த விலையை விட ரூ.50 கூடுதலாக வசூல் செய்யப்படுவதாக பொதுமக்களிடையே புகார் எழுந்தது.
இந்தநிலையில் வருசநாடு அருகே தங்கம்மாள்புரத்தில் நேற்று கியாஸ் சிலிண்டர் வினியோகத்தின் போது பொதுமக்களிடம் கூடுதலாக ரூ.50 வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் கேட்டதற்கு தனியார் ஏஜென்சி பணியாளர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் கூடுதல் பணம் வசூல் செய்வதற்கு முறையான காரணம் தெரிவிக்கக்கோரி சிலிண்டர் ஏற்றி வந்த லாரியை முற்றுகையிட்டனர். இதையடுத்து ரசீது தொகையை தவிர்த்து கூடுதலாக பணம் வசூல் செய்யப்படமாட்டாது என்று பணியாளர்கள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தங்கம்மாள்புரத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.