இந்தியாவிலேயே பொதுமக்களிடம் குறைகளை கேட்பதற்கு தனித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது தமிழகத்தில்தான் அமைச்சர் பொன்முடி பெருமிதம்
இந்தியாவிலேயே பொதுமக்களிடம் குறைகளை கேட்டு பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தனித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது தமிழகத்தில்தான் என அமைச்சர் பொன்முடி கூறினார்
திருக்கோவிலூர்
நலத்திட்ட உதவிகள்
விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஒன்றியத்துக்குட்பட்ட கண்டாச்சிபுரத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சரின் திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் ஆர்.லட்சுமணன், புகழேந்தி, முகையூர் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி உமேஸ்வரன், துணைத்தலைவர் மணம்பூண்டி மணிவண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பிரபு, ராஜீவ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கண்டாச்சிபுரம் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 698 பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
694 பயனாளிகளுக்கு
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் முகையூர் ஒன்றியம் கண்டாச்சிபுரம் பகுதியில் நானும், கலெக்டரும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினோம்.
பின்னர் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து தற்போது இப்பகுதியைச் சேர்ந்த 210 பேருக்கு வீட்டுமனை பட்டா, 69 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 290 பேருக்கு தொகுப்பு வீடு கட்டுவதற்கான ஆணை, வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் 27 பேருக்கும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று, இருப்பிட சான்று மற்றும் வருமான சான்று என மொத்தம் 694 பேருக்கு ரூ.7 கோடியே 15 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
தனித்துறை
இந்தியாவிலேயே பொதுமக்களிடம் குறைகளை கேட்டு பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தனித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் மட்டும்தான். பொதுமக்களின் நலன் மீது அக்கறை கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நலத்திட்ட உதவிகளை பெற்று வரும் மக்கள் என்றும் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவி தி.மு.க. மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா, விழுப்புரம் மத்திய மாவட்ட துணை செயலாளர் முருகன், விழுப்புரம் மத்திய மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் ராயல் அன்பு, விழுப்புரம் மாவட்ட அரசு வக்கீல் சித்தாத்தூர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சீனுவாசன், சாம்ராஜ், மேனேஜர் கண்ணதாசன், திருக்கோவிலூர் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் குணா என்கிற குணசேகரன், தொழிற்சங்க நிர்வாகி சரவணன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் குப்புசாமி, மீனாகுமாரி, ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், நகர இளைஞர்அணி துணை அமைப்பாளர் விக்கி, அருமலை கோபி, கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் ஜீவானந்தம், ஊராட்சி செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கண்டாச்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதேவி ரவிக்குமார் நன்றி கூறினார்.