கோவை
கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்தவர் ரவீந்திரநாத். விவசாயி. இவர் கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி தனது காரில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது அவருடைய காரின் முன்பு மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த ரங்கநாதன் (வயது 29), சுப்பிரமணியன் (30) ஆகியோர் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது ரவீந்திரநாத் காரில் இருந்து ஹாரன் அடித்துள்ளார்.
ஆனால் அவர்கள் வழிவிடவில்லை என்று தெரிகிறது. இதனால் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் சேர்ந்து ரவீந்திரநாத்தை தாக்கி, கார் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
இது குறித்த புகாரின் பேரில் சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கநாதன், சுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் ரங்கநாதனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், சுப்பிரமணியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் வாதாடினார்.