காங்கேயம் அருகே உயர்மின்கோபுரம் முன்பு விவசாயிகள் போராட்டம்

காங்கேயம் அருகே உயர்மின்கோபுரம் முன்பு விவசாயிகள் போராட்டம்

Update: 2021-12-03 16:28 GMT
காங்கேயம், 
காங்கேயம் அருகே உயர்மின்கோபுரம் முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.
உயர் மின்கோபுரம் 
தமிழகத்தில் விவசாயிகளின் விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.  தாராபுரம் ராசிபாளையம் முதல் தர்மபுரி மாவட்டம் பாலவாடி வரை உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 90 சதவீதம் வரை பணி நிறைவடைந்து விட்டன.  இந்த திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.  
மேலும் அரசு சார்பில் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி உயர்மின் கோபுரங்களில் குடியேறும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.
 இதைத்தொடர்ந்து காங்கேயம் அருகே உள்ள ராமபட்டினம் பகுதியில் நேற்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் உயர் மின் கோபுரம் அருகே வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிய இழப்பீடு
அப்போது இதில்  விருதுநகர் முதல் திருப்பூர் வரையிலான 765 கிலோ வாட் திட்டப்பணிகளை உயர் நீதிமன்ற வழக்கு முடியும் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.பவர் கிரிட் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் உள்ளிட்ட நிறுவனங்களின் 16 திட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மின்கோபுரம் அமையும் இடத்திற்கு 200 சதவீதம் இழப்பீடு வழங்கவேண்டும். கம்பி செல்லும் இடத்திற்கு 100 சதவீத இழப்பீடும், திட்டப்பாதையில் உள்ள வீடு, கிணறு, ஆழ்குழாய் கிணறு மற்றும் கட்டுமானங்களுக்கு பொதுப்பணித்துறையின் கணக்கீட்டின்படி இழப்பீடும் 100 சதவீத ஆதாரதொகையும், மாத வாடகையும் வழங்க வேண்டும்.
 விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையடுத்து விவசாயிகளிடம் காங்கேயம் தாசில்தார் சிவகாமி,  துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன் பேச்சுவார்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் அதுவரை தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்ததையடுத்து விவசாயிகளும் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்