சின்னசேலத்தில் பேரூராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
சின்னசேலத்தில் பேருராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
சின்னசேலம்
சேறும், சகதியுமான சாலை
சின்னசேலம் பேரூராட்சிக்குட்பட்ட கூகையூர் செல்லும் சாலையில் அரிசி ஆலை பணியாளர்களின் நகர் அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். தொடர் மழையால் இங்குள்ள சாலையில் மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக மாறியதோடு நடக்க முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக உள்ளதால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைத்து தரக்கோரி பேரூராட்சி நிர்வாகத்திடம் அந்த பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சின்னசேலம்- கூகையூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார், தாசில்தார் அனந்தசயனன், கிராம நிர்வாக அலுவலர் நாகராஜன், பேரூராட்சி அதிகாரிகள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் உஷா சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் கிராவல் மண் கொட்டி தற்காலிக சீரமைப்பு செய்து தரப்படும். பின்னர் அரசிடம் இருந்து நிதி ஆதாரம் பெற்று தார் சாலை அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சின்னசேலம்- கூகையூர் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.