பள்ளி அங்கன்வாடி கட்டிடங்களின் நிலைகுறித்து கணக்கெடுக்க வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களின் தற்போதைய நிலைகுறித்து கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-12-03 16:05 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களின் தற்போதைய நிலைகுறித்து கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹ தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித்திட்டம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், கிராமப்புற சாலைகள் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், ஏரிகள், குளம் மற்றும் குட்டை, கால்வாய்கள் தூர்வாருதல் உள்ளிட்ட  திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு பகுதி கிராமங்களில் மழைநீர் தேங்கியதன் தற்போதைய நிலைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

கணக்கெடுக்க வேண்டும்

கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில் மாவட்டத்தில் 208 ஊராட்சி பகுதிகளில் உள்ள பழமையான பள்ளி கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், சமையல் அறைகளின் தற்போதைய நிலை மற்றும் புதிய கட்டிடங்கள் தேவைகள் குறித்து கணக்கெடுப்பு செய்து வரும் திங்கட்கிழமைக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

 ஏலகிரிமலை, நெக்கனாமலை, நாயக்கனேரி, புதூர்நாடு ஆகிய மலைகிராமங்களில் மழையின் காரணமாக பழுதடைந்த சாலைகளை கணக்கெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

 திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 100 சதவீதம் வீடுவீடாக சென்று காலை 8 மணிக்குள் குப்பைகளை சேக்க வேண்டும். அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடவுசெய்வதில்  நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரபாண்டியன், உதவி செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், பழனிசாமி மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்