மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மண் சோறு சாப்பிட்டு போராட்டம்
கடலூரில் பரபரப்பு
கடலூர்,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மாத உதவித்தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும். தனியார் தொழிற்சாலைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும். இலவச வீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாற்றுத்திறனாளிகளின் லட்சிய முன்னேற்ற சங்கத்தினர் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் எதிரே மண் சோறு சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர்கள் தில்லைநாயகம், சர்க்கரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சித்ரா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சந்தோஷ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு மண் தரையில் சாப்பாட்டை கொட்டி, அதை சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர்.