இலங்கை அரசால் விடுக்கப்பட்ட மேலும் 5 மீனவர்கள் நாகைக்கு வந்தனர்
இலங்கை அரசால் விடுக்கப்பட்ட மேலும் 5 மீனவர்கள் நாகைக்கு நேற்று வந்தனர். இலங்கையில் உள்ள படகுகளை மீட்டுத்தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
வெளிப்பாளையம்:
இலங்கை அரசால் விடுக்கப்பட்ட மேலும் 5 மீனவர்கள் நாகைக்கு நேற்று வந்தனர். இலங்கையில் உள்ள படகுகளை மீட்டுத்தர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மீனவர்கள் விடுதலை
நாகை அக்கரைப்பேட்டை மற்றும் பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த 23 மீனவர்களை கடந்த அக்டோபர் மாதம் 13-ந் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த 23 மீனவர்களையும் இலங்கை கோர்ட்டு விடுதலை செய்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக நாகை மீனவர்கள் 5 பேர் இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் 18 மீனவர்கள் கடந்த 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டு சொந்த ஊருக்கு வந்தடைந்தனர்.கொரோனா தொற்று குணமடைந்ததால் தனிமைப்படுத்தப்பட்ட மீனவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர்.
சொந்த ஊருக்கு வந்தனர்
அதனை தொடர்ந்து இலங்கையில் இருந்து விமானம் மூலம் 5 மீனவர்களும் சென்னைக்கு வந்தனர். அங்கிருந்து கார் மூலம் சொந்த ஊரான அக்கரைப்பேட்டைக்கு நேற்று மதியம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை அவர்களது உறவினர்கள் மற்றும் கிராம நிர்வாகிகள் சால்வை அணிவித்து கண்ணீர் மல்க வரவேற்றனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்ய உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் நன்றி கூறினர். இலங்கையில் உள்ள விசைப்படகுகளை விரைந்து மீட்டுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கண்ணீர் மல்க மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.