மறியலில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 327 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டத்தில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட கட்டுமானத்தொழிலாளர்கள் 327 பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்:
மத்திய அரசு கட்டுமான பொருட்களுக்கான சரக்கு-சேவை வரியை குறைக்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களுக்கான சட்டங்களில் திருத்தம் செய்வதை கைவிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அதேபோல் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது. அதன்படி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதற்கு சங்க நிர்வாகிகள் சிறுமணி, சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன், துணை செயலாளர் ஜெயசீலன் மற்றும் கட்டுமான சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் குஜிலியம்பாறையில் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பழனியில் மாவட்ட செயலாளர் பிரபாகரன், வத்தலக்குண்டுவில் நிலக்கோட்டை தொகுதி கட்டுமான சங்க தலைவர் மனோகரன் ஆகியோர் தலைமையில் தொழிலாளர்்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதவிர ஒட்டன்சத்திரத்திலும் கட்டுமான தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 5 இடங்களில் நடந்த மறியலில் 161 பெண்கள் உள்பட மொத்தம் 327 பேர் கைது செய்யப்பட்டனர்.