குளிர்கால கூட்டத் தொடரில் சபாநாயகர் தேர்தல்- நானா படோலே தகவல்
குளிர்கால கூட்டத் தொடரில் சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று நானா படோலே கூறினார்.
மும்பை,
குளிர்கால கூட்டத் தொடரில் சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று நானா படோலே கூறினார்.
சபாநாயகர் தேர்தல்
மராட்டிய சட்டசபை சபாநாயகராக இருந்தவர் நானா படோலே. இவர் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டதால், சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சபாநாயகர் பதவி காலியிடமாக உள்ளது.
இந்த சட்டசபை கூட்டத் தொடரில் இந்த பதவிக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக சட்டசபை கூட்டம் குறைந்த நாளே நடந்ததால் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்தநிலையில் வருகிற 22-ந் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத் தொடரில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:-
காங்கிரசுக்கு...
மகா விகாஸ் அகாடி கூட்டணியின் முடிவு படி சபாநாயகர் பதவி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு தான் வழங்கப்படும். இந்த குளிர்கால கூட்டத் தொடரில் புதிய சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும். வாக்கெடுப்புக்கு பதில் குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடைபெறும். குரல் வாக்கெடுப்பு நடத்துவதில் தவறு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டிய சட்டசபை வரலாற்றில் இதுவரை சபாநாயகர் போட்டியின்றி தான் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபையில் ஆளும் கூட்டணிக்கு 152 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதனால் இந்த தடவையும் சபாநாயகர் தேர்தலில் போட்டி இருக்காது என்று நம்பப்படுகிறது.