விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் வெள்ளம் ஓடுவதால் 20 கிராம மக்கள் கயறு கட்டி ஆற்றை ஆபத்தான நிலையில் கடந்து வருகின்றனர்
விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் வெள்ளம் ஓடுவதால் 20 கிராம மக்கள் கயறு கட்டி ஆற்றை ஆபத்தான நிலையில் கடந்து வருகின்றனர்
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் 20 கிராம மக்கள் அன்றாட தேவைக்கு ஆற்றின் குறுக்கே கயிறு கட்டி ஆபத்தான நிலையில் வெள்ளத் தண்ணீரை கடந்து சென்று வருகின்றனர்.
வைப்பாற்றில் வெள்ளம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த 10 தினங்களுக்கு மேல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் கண்மாய்கள் நிரம்பியுள்ளன. விளாத்திகுளம் பகுதியில் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வைப்பாற்றில் 11 தடுப்பணைகளும் 5 ஆண்டுகளுக்கு பின்னர் முழுமையாக நிரம்பி தண்ணீர் அதிகளவில் வெளியேறி வருகிறது. இதனால் வைப்பாற்றில் வெள்ளபெருக்கெடுத்து தண்ணீர் ஓடுகிறது. இதன் காரணமாக வைப்பாற்றின் கரையோரம் இருக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
20 கிராம மக்கள் பாதிப்பு
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் உள்ள அயன்ராசாபட்டி, கைலாசபுரம், கீழ்நாட்டு குறிச்சி உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்தவர்கள் விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் சாத்தூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளிலும் இப்பகுதி மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதே போன்று சிந்துவம்பட்டி, உப்பத்தூர், அய்யம்பட்டி, நாருகபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் நாகலாபுரத்தில் உள்ள கல்லூரி மற்றும் விளாத்திகுளத்தில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இந்த 20 கிராமங்களுக்கு இடையே வைப்பாறு செல்கிறது. இந்த ஆற்றை கடக்க பாலம் இல்லை. கிராமத்திலிருந்து ஆற்றின் குறுக்கே நடந்து சென்று மறுகரைக்கு செல்வது இக்கிராம மக்களின் வாடிக்கை. வெள்ளம் ஓடும் காலத்தில் 40 முதல் 60 கி.மீ. சுற்றி மறுகரைக்கு செல்ல வேண்டும்.
கயிறு கட்டி ஆபத்தான...
தற்போது ஆற்றில் வெள்ளம் ஓடுவதால் இந்த கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
இரு பகுதியில் உள்ள மக்கள் சிந்துவம்பட்டி கிராமத்தின் வழியாக வைப்பாற்றின் குறுக்க கயிறு கட்டி ஆபத்தான சூழலில் கடந்து சென்று வருகின்றனர். எனவே, விரைவில் வைப்பாற்றின் குறுக்கே பாலம் கட்டினால் மட்டுமே இக்கிராம மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.